கடைசி மனிதன் - அவன் தமிழன்!

|

(ஈழ தமிழர் போரின் போது எழுதப்பட்டது...)
  1. பாண்டா கரடி குறையுது
    காண்டா மிருகம் மாயுது
    கூவும் கருணை கூட்டமே-
    அழியும் இனம் அழிய விட்டு
    அமைதியாய் இருப்பதேனோ?

  2. சாணக்கிய சூத்திரம்
    சகுனியின் சாத்திரம்
    கற்று தேர்ந்த கனவான்களே-
    சாகும் வரை சாக விட்டு - சகுனம் பார்த்து
    சாகும் வரை உண்ணாவிரதமா?

  3. இணக்கம் இல்லை என்றான் - நட்பு
    சுணக்கம் ஆனது என்றான்-
    இருந்தால் தானே இனம்
    இழிக்குமென்றெண்ணினானோ, துரோகி?

  4. எம்மால் அரியணை ஏறி
    எம்முன் ஆறுதல் கூறி - பின் சென்று
    எம்மினம் அழிபீரோ?
    ஒருவனுக்கு ஓரினம் சமமாமோ?

  5. கூரை தரையானது
    தரை பிணவறையானது!
    நிறுத்தி விட்டோம் போரென்று
    புறப்பட்டு வருவோரே-
    பிணம் தின்னி கழுகுகளோடு
    பந்தியுண்டுச் செல்லுங்கள்!

  6. படைத்தவனை விட்டு
    அடுத்தவனைச் சொல்லியெதற்கு?
    படைத்தவன் படைத்து விட்டு - மடிந்தானோ
    எம்மை தனியே விட்டு?

  7. இறைவா -
    நின் பயிற்சிக்கு எம் நன்றி!
    ஒடிந்து ஓய்தல் - அது பயிற்சி,
    இடிந்து சாய்தல் - அது பயிற்சி,
    மடிந்தது மாய்தல் - அது பயிற்சி!
    காத்திரு - இறைவா - பாத்திரு!
    விரைவில் விரைவில் எம் எழுச்சி!

  8. காத்திரு - இறைவா - பாத்திரு!
    புவி ஆயுள் எம் ஆயுள்!
    மடிவான் கடைசி மனிதன்
    அவன் தமிழன்!

என் புவி - நான் கவி

|
என் புவி - நான் கவி

  1. தொங்கிய விழுதுகள் தாங்கும் நேரம்
    விலகி போக விறகாய் நிற்போம்
    ஒட்டிப் பிறந்ததும், ஒட்டப் பிறந்துமா உறவுகள்?

    வயதேராத வாழ்வு கொண்டபின்
    விளங்கட்டும் எல்லாம்!

  2. பகலெல்லாம் ஓடிக் கழித்து,
    இரவெல்லாம் கூடிக் கழித்து
    கவனியாது கழிந்த பருவம்
    முதுகில் முதுமை ஏற்றும்
    நெற்றி பொட்டிற்குச் சில்லறை மாற்றும்.

    முதிர்ந்திருந்தால் வெளிறி சிரி!
    முந்தியிருந்தால் வெளிரும் முன் சிரி!

  3. ஐம்புலனும் அரைபுலன்;
    அரைகூரை ஆகாயம்;
    குழிந்த விழிக்குள் பழங்கதை;
    கூன் விழுந்தது வாலிப நாற்காலிக்கு!

    அண்ணார்ந்து பாத்து ஆகாயம் சேகரி !
    புவி அதிர வேர் விட்டு நட!!

  4. இடி தாங்க நீயிருக்க
    யாருக்கோ விழுந்த
    இடி கடி!
    யுகம் கோடி ஓட விட்டு
    முன் வெட்டிய
    மின்னல் கொண்டாடு!!
    திசை கோடி மூடியிருக்க
    மேல் கொட்டிய
    மழை கரைந்தாடு!!!

  5. சொன்னது பொய்த்துப் போகும்
    சொல்லாதது நிலைத்து விடும்
    சரித்திரம் என்று சொல்லி
    சந்ததிகள் பாடித் திரியும்

  6. மகாகவி என விளிக்கலாம்,
    கொடும்பாவி என பழிக்கலாம்
    செம்மறிக்கூட்டம் துதி பாடவா
    சக்கரவர்த்தி செய்யுள் படைத்தான்?

    புரிந்தால் தலையாட்டு
    இல்லையேல் வாய்பூட்டு !

  7. விதியென்பார், மீறலென்பார்.
    விதிமுடிந்து விண்ணேறியபின்,
    தூசிதட்டி தூர்வாரி
    கவியென்பார், காவியமென்பார்.
    நானறியாத வகை கூறி
    தந்தையென்பார் என்னை,
    தலைமுறையென்பார் தன்னை !

  8. காலம் போகட்டும் அதன் வழி...
    விதி முறி - கவி வடி!!

    இது - என் புவி !
    அதில் - நான் கவி !!